தாலிபான்கள் தங்கள் முடிவை அறிவிக்கனும்! அவர்களின் உறுதித்தன்மை... உடைத்து பேசிய ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது குறித்து ஜோ பைடன் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் அங்கு தாலிபான்கள் கையில் ஆட்சி சென்றுள்ளது.
அதைத் தொடர்ந்து அங்கு குழப்பமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பேசுகையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை வரலாறு தர்க்க ரீதியாக சரியான முடிவு என்று பதிவு செய்யும்.
ஆப்கனில் அமைதி திரும்ப வேண்டுமென்றால், தாலிபான்கள் தங்களின் முடிவை அறிவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஆட்சியை கொடுப்பார்களா? என்று தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இதுவரை இதுபோன்ற சிறிய ஆயுதம் ஏந்திய குழுக்கள் எதுவுமே இப்படியான முடிவை எடுத்ததில்லை. ஒருவேளை அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை முன்மொழிந்தால் அதற்கு அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படும்.
பொருளாதார, வர்த்தக ரீதியாக என பலதரப்பிலிருந்தும் உதவிகள் தேவைப்படும். அவர்கள் தங்களை சட்டப்பூர்வமாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், அவர்கள் வார்த்தையில் எவ்வளவு உறுதித் தன்மை இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை தாலிபான்கள் படைகள் அமெரிக்கப் படைகள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை.
ஆனால், தாலிபான் படைகளில் அனைவருமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது இன்னும் சிறு, சிறு குழுக்களாகவே இயங்குகிறது. அதனால் இது நீடிக்கிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.