இவருக்கெல்லாம் 1 ரூபாய் கூட கொடுக்கவே கூடாது - ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
இவருக்கெல்லாம் 1 ரூபாய் கூட கொடுக்கவே கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஆர்ச்சரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆர்ச்சரை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்
தற்போது, 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையாதபோது, நடப்பு ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணி பல கோடி சம்பளத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் பின்பு, அவர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியபோது மீண்டும் காயம் அடைந்தார்.
இதனால், மீண்டும் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றார். பின்னர் திரும்பி வந்த அவர் மீண்டும் விளையாடியபோது காயம் அடைந்து இங்கிலாந்திற்கே சென்று விட்டார்.
ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்
இது குறித்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஆர்ச்சர் ஏற்கெனவே காயம் அடைந்தவர். ஒரு காயம் அடைந்த நபரை எப்படி மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. அதுவும் கோடிக்கணக்கில் பெரிய தொகை கொடுத்து அவரை வாங்கியது.
அவருக்கு உடல் தகுதி இல்லை என்று முதலிலேயே நிர்வாகத்திடம் சொல்லியிருக்க வேண்டும். உடல் தகுதியே இல்லாதபோது சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தன் நாட்டிற்கு அவர் சென்றுவிட்டார். இது நியாயமா?
அவர் ஐபிஎல் தொடர் முடியும் வரைவாவது இங்கு இருந்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவே இல்லை. எனவே, அவருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது. ஆர்ச்சர் அவருடைய சம்பளத்திலிருந்து பாதி தொகையை தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.