ஜோர்டான் நாட்டின் இளவரசியாக உள்ள இந்திய வம்சாவளி பெண் - பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜோர்டான் சென்றார். இந்த பயணத்தில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

மேலும், ஜோர்டான் அரசகுடும்பத்தினரை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜோர்டான் அரச குடும்பத்தில் இந்திய வம்சாவளி பெண் இருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஜோர்டான் இளவரசியாக இந்திய வம்சாவளி
ஜோர்டானில் சுமார் 30 ஆண்டுகளாக பட்டத்து இளவரசியாக இருந்தவர் இளவரசி சர்வத் எல் ஹாசன்.

இவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வங்காள முஸ்லிம் குடும்பமான சுஹ்ரவர்டி குடும்பத்தில் பிறந்தவர்.
போபாலில் பிறந்த அவரது தந்தை முகமது இக்ரமுல்லா, பிரித்தானிய ஆட்சிகாலத்தில் இந்திய குடிமை பணியில் மூத்த அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
முகமது அலி ஜின்னாவின் பிரிவினைக் குழுவில் சேர்ந்த அவர், பின்னர் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறைக்கான முதல் வெளியுறவுச் செயலாளராகவும், கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் பிரித்தானியாவிற்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

கொல்கத்தாவில் பிறந்த சர்வத்தின் தாய் பேகம் ஷைஸ்தா சுஹ்ரவர்தி இக்ரமுல்லா, பாகிஸ்தானின் முதல் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மேலும், மொராக்கோவிற்கான தூதராகவும் இருந்துள்ளார்.
சர்வத்தின் தந்தை வழி மாமா முகமது ஹிதாயத்துல்லா இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரது தாய் வழி மாமா ஹுசைன் ஷாஹீத் சுஹ்ரவர்தி பாகிஸ்தானின் பிரதமராகவும் இருந்தார்.
பாகிஸ்தானில் திருமணம்
பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயின்ற இவர், தன்னுடைய 11 வயதிலே, 1958 ஆம் ஆண்டு லண்டனில் இளவரசர் ஹாசனை முதன்முதலில் சந்தித்தார்.

1968 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் ஜோர்டானின் இளவரசர் ஹசன் பின் தலாலை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு இளவரசி ரஹ்மா, இளவரசி சுமயா, இளவரசி பதியா 3 மகள்களும், இளவரசர் ரஷீத் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
30 ஆண்டுகளாக பட்டத்து இளவரசியாக இருந்த சர்வத், பதவிக் காலம் முழுவதும், கல்வி, சமூக நலன் மற்றும் பெண் அதிகாரமளிப்பை அவர் ஆதரித்தார்.
இளவரசி சர்வத் அரபு, ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றுள்ளார். மேலும், டேக்வாண்டோவில் கருப்பு பெல்ட் பெற்ற ஜோர்டானின் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |