ட்ரம்பை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்த மத்திய கிழக்கு நாடு
பாலஸ்தீன பகுதியான காஸாவை கைப்பற்றும் டொனால்டு ட்ரம்பின் திட்டத்திற்கு மத்திய கிழக்கு நாடான ஜோர்தான் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடுகடத்துவதற்கான
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் இருந்து சுமார் 2,000 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை தனது நாடு ஏற்றுக்கொள்ளும் என்று ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா டொனால்ட் ட்ரம்பிடம் உறுதி அளித்தார்.
ஆனால் பாலஸ்தீன பிரதேசத்தைக் கைப்பற்றி அதன் மக்களை நாடுகடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு தமது எதிர்ப்பையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இருப்பினும், காஸாவை கைப்பற்றுவேன் என்றே டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ட்ரம்பை நேரில் சந்தித்ததன் பின்னர் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள மன்னர் இரண்டாம் அப்துல்லா,
காஸா மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதற்கு எதிரான ஜோர்தானின் உறுதியான நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன். இதுதான் ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் நிலைப்பாடு.
பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்யாமல் காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதும் சீரழிந்துள்ள மனிதாபிமான நிலைமையை நிவர்த்தி செய்வதும் அனைவருக்குமான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக நிராகரித்தார்
இருப்பினும், இந்த திட்டத்தில் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ட்ரம்புடன் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதற்கான திட்டத்தில் எகிப்து செயல்பட்டு வருவதாக அவர் ட்ரம்பிடம் கூறியுள்ளார்.
முன்னதாக அகதிகளை ஜோர்தான் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அமெரிக்கா அளிக்கும் நிதியுதவிகள் ரத்தாகும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து மிகவும் மோசமான நிலையில் உள்ள 2,000 நோய்வாய்ப்பட்ட சிறார்களை ஏற்றுக்கொள்வதுதான் சாத்தியமான ஒன்று என அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மன்னர் அப்துல்லா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக உள்ளார், ஆனால் கடந்த வாரம் பாலஸ்தீன பிரதேசங்களைக் கட்டுப்படுத்தவும் அதன் மக்களை இடம்பெயரவும் முன்னெடுக்கும் டொனால்டு ட்ரம்பின் எந்தவொரு முயற்சியையும் அவர் மொத்தமாக நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |