தென் ஆப்பிரிக்காவை காலி செய்த ஹேசல்வுட்! டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு
Josh hazlewood best bowl vs south africa test: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
டர்பனில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா டிக்ளேர்
அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனின் கிங்ஸ்மீத்தில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 390 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 284 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
மேட் ரென்ஷா 82 (99) ஓட்டங்களும், நிக் மேடின்ஸன் 48 (38), பியூ வெப்ஸ்டர் 39 (43) ஓட்டங்களும் எடுத்தனர். என்ரிச் நோர்ட்ஜே, கேஷவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
421 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், டேவிட் பெடிங்கம் 46 ஓட்டங்கள் எடுக்க ரிக்கெல்டன் (2), பவுமா (1), ஸ்டப்ஸ் (1) ஆகியோர் சொதப்பினர்.
எய்டன் மார்க்ரம் நங்கூர ஆட்டம்
எனினும் எய்டன் மார்க்ரம் (Aiden Markram), வியான் முல்டர் இருவரும் நங்கூரமாக நின்று ஆடினர். இந்தக் கூட்டணியை ஹேசல்வுட் பிரித்தார். 110 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முல்டர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜென்சன் அதிரடியாக ஆட, மார்க்ரம் அரைசதம் கடந்தார். அணியின் ஸ்கோர் 201 ஆக உயர ஜென்சன் 35 (54) ஓட்டங்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் போல்டானார்.

பின்னர் களமிறங்கிய ஹார்மர் அதே ஓவரில் டக்அவுட் ஆக, மார்க்ரம் 75 (237) ஓட்டங்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
கடைசி விக்கெட்டாக நோர்ட்ஜேவை 4 ஓட்டங்களில் ஹேசல்வுட் வெளியேற்ற, தென் ஆப்பிரிக்க அணி 206 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவின் தரப்பில் ஜோஷ் ஹேசல்வுட் 6 விக்கெட்டுகளும், மேட் ரென்ஷா 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
