பிரான்ஸ் ஜனாதிபதியின் உதவியை நிராகரித்த உக்ரைன் பெண் செய்தியாளர்
ரஷ்யாவில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நேரலையில் தொலைக்காட்சியில் குரல் கொடுத்த பெண் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புகலிடம் அளிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முன்வந்தார்.
ஆனால், மேக்ரானின் உதவியை அந்தப் பெண் செய்தியாளர் நிராகரித்துவிட்டார்.
சில நாட்களுக்கு முன், ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, திடீரென, ’போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் ஒரு பெண்.
அவரது பெயர் Marina Ovsyannikova. அவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றின் எடிட்டர் ஆவார்.
நேரலையில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து Marina மாஸ்கோவிலுள்ள Ostankino நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், அவர் மீது அங்கீகாரமற்ற பொது நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு 30,000 ரூபிள்கள் அபராதமும், 10 நாட்கள் சிறை அல்லது சமூக சேவை தண்டனையாக அளிக்கப்படலாம் என்றும் BBC செய்தி வெளியிட்டது.
தான் நாட்டுப்பற்றுடையவள் என்றும், தன்னை விட தன் மகனுக்கு நாட்டுப் பற்று அதிகம் என்றும் கூறியுள்ள Marina, எந்த நிலையிலும், தாங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும், வேறெங்கும் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னைப்போலவே ரஷ்ய ஊடகங்களில் பணியாற்றும் பலருக்கும் போர் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவும், ஆனாலும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவேண்டியிருப்பதால் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.
இந்த நிலையில் புதிதாக ஒரு வேலையைத் தேடிக்கொள்வது கடினம் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்கிறார் Marina. இந்த விடயம் குறித்துக் கேள்விப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் Marinaவுக்கு உதவ விரும்புவதாகத் தெரிவித்தார்.
Marinaவின் பாதுகாப்புக்காக நாங்கள் தூதரகம் வாயிலாகவோ அல்லது புகலிடம் வழங்கும் அமைப்பு மூலமாகவோ தூதரக ரீதியில் நடவடிக்கைகளைத் துவக்க இருக்கிறோம் என்று கூறினார் மேக்ரான்.
தற்போது தான் அவ்வப்போது ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி உரையாடல்கள் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்துவரும் நிலையில், இந்த விடயம் குறித்து புடினுடன் பேச இருப்பதாக மேக்ரான் தெரிவித்தார்.
ஆனால், மேக்ரானின் உதவியை நிராகரித்துவிட்ட Marina, தனக்கு ரஷ்யாவை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.