அப்பெண் துவாரகாவே இல்லை! என்னிடம் ஆதாரம் உள்ளது - அடித்துக் கூறும் பத்திரிகையாளர்
மாவீரர் நாளில் வெளியான வீடியோவில் பேசிய பெண் துவாரகாவே இல்லை என்றும், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு அது தெரியும் என்றும் பிரபல பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி 'மாவீரர் நாள்' அன்று, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்ணொருவர் பேசிய வீடியோ வெளியானது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பல தரப்பினரும் அப்பெண் துவாரகா இல்லை என்று கூறினர். மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேறொரு நபரை அப்படியே பிரதி எடுக்கலாம், அதனைப் பயன்படுத்தி இவ்வாறு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகின.
இந்த நிலையில் துவாரகா எனும் பெயரில் பேசிய பெண் குறித்த விடயங்களை பிரபல பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'யாரோ ஒரு பெண், அவரது ஆதாரங்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. டிக் டாக்கில் பிரபலமான அவரை அழைத்து வந்து துவாரகா என்று கூறி ஏமாற்றுகிறார்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள்? எதற்கு ஏமாற்றுகிறீர்கள்? உங்களின் பிழைப்பு வாதத்திற்கு ஈழத்தமிழர் தான் கிடைத்தார்களா?' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'சர்வதேச அளவில் ஒரு பத்து பேர் சேர்ந்த திருட்டு கும்பல், 10x10 ஸ்டூடியோவில் அப்பெண்ணை பேச வைத்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழர்கள் அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது சுவிஸில் எடுக்கப்பட்ட வீடியோ. அந்த வீடியோ வரும் முன்பே அவர் ஒரு போலி என்பதை நான் கூறியிருந்தேன். மூன்று தரப்பினரையும் சந்தித்து பேட்டி எடுத்தவன் என்ற முறையில் தான் கூறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |