கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி
கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது பொலிசாரால் கைது செய்யப்பட்ட இந்தியரை நீதிபதி ஒருவர் விடுவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் மூன்று மாதங்களாக தங்கியிருந்த ஒருவரை அமெரிக்க பொலிசார் அத்துமீறி பொது கட்டிடம் ஒன்றிற்குள் நுழைந்ததாக கைது செய்தனர்.
அவரது பெயர் ஆதித்யா சிங் (36). தாடி மீசையுடன் வீடற்ற ஒருவர் போல காணப்பட்ட அந்த நபர் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருக்கிறார். Oklahoma மாகாண பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கல்வி ஒன்றை பயின்ற அவர், கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு, விருந்தோம்பல் துறைப் பணியாளராக பணியாற்றிய அவர், தனது நண்பர் ஒருவரின் தந்தையை கவனித்துக்கொள்ளும் வேலையைப் பார்த்திருக்கிறார்.
தனது விசாக்காலம் முடிவடையும் நாள் நெருங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார் அவர்.
2020ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஏறி சிக்காகோ விமான நிலையம் வந்திருக்கிறார் அவர். ஆனால், இந்தியாவுக்குச் சென்றால் கொரோனா தொற்றிவிடுமோ என பயந்து விமான நிலையத்திலே தங்கிவிட்டிருக்கிறார்.
யாரோ ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு, விமான நிலையத்திலேயே மறைவான ஒரு இடத்தில் மூன்று மாதங்களாக வாழ்ந்துவந்திருக்கிறார் ஆதித்யா.
முன்பின் தெரியாதவர்கள் வாங்கிக்கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்துவந்த ஆதித்யாவை ஜனவரி மாதம் பொலிசார் கைது செய்தார்கள்.
அவர் கைது செய்யப்பட்ட விடயம் தெரியவந்தபோது, ஒரு வெற்றிகரமான விருந்தோம்பல் துறைப் பணியாளராக வலம் வந்த ஆதித்யா கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
அவர் ஒரு அறைக்குள் வந்தாரென்றால் அந்த அறையே பிரகாசமாகிவிடும், அப்படி ஒரு முன்மாதிரியான விருந்தோம்பல் துறைப் பணியாளராக இருந்தவர் ஆதித்யா என்கிறார் அவருடன் பணியாற்றிய Katherine Ruck என்பவர்.
இந்நிலையில், தற்போது ஆதித்யாவை நீதிபதி ஒருவர் அத்து மீறியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்.
ஆதித்யா கைது செய்யப்பட்டபின், சிக்காகோ விமான நிலைய பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், ஆதித்யா விமான நிலைய விதிகளை மீறவில்லை என்ற முடிவுக்கு வந்தது.
ஆதித்யா அத்துமீறி நுழையவோ, பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழையவோ இல்லை. அவர் மற்ற பல்லாயிரக்கணக்கான பயணிகளைப் போலவே விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் வந்துள்ளார், அவ்வளவுதான் என்று கூறியுள்ள விமானத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், அவர் எதற்காக விமான நிலையத்திலே தங்கிவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், கைது செய்யப்படும் வரை ஒரு சாதாரண பயணியைப் போல, ஒரு விமான நிலைய ஊழியரைப் போல இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.