குகையில் குழந்தைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண்: கணவரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி
கர்நாடகா மாநிலத்தில், குகை ஒன்றில் தன் மகள்களுடன் வாழ்ந்துவந்த ரஷ்யப் பெண் ரஷ்யாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது நாடுகடத்தலைத் தடுப்பதற்காக மேல்முறையீடு செய்த அந்தக் குழந்தைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நீதிபதிகள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துள்ளார்கள்.
குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் பெண்
சில மாதங்களுக்குமுன், இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ரோந்து சென்ற பொலிசார், அங்கு ஒரு குகைக்குள் வெளிநாட்டவரான ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
ரஷ்ய நாட்டவரான அந்தப் பெண்ணின் பெயர் மோஹி என்னும் நினா குட்டினா (40). மோஹியுடன், அவரது மகள்களான ப்ரேயா (6) மற்றும் அமா (4) ஆகிய இருவரும் அந்த குகைக்குள் இரண்டு வாரங்களாக தங்கியிருந்துள்ளனர்.
நினா, சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு பிசினஸ் விடயமாக வந்த இஸ்ரேல் நாட்டவரான ட்ரோர் ஷ்லோமோ கோல்ட்ஸ்டெயின் (Dror Shlomo Goldstein) என்பவரை இந்தியாவில் சந்தித்ததாகவும், நினாவுக்கும் கோல்ட்ஸ்டெயினுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் ப்ரேயாவும் அமாவும் என்றும் செய்திகள் வெளியாகின.
நினாவின் விசா காலாவதியாகிவிட்டதால், அவர் ரஷ்யா செல்ல வசதியாக அவருக்கான ஆவணங்களை வழங்குமாறு கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி, நினாவும் அவரது பிள்ளைகளும் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இதற்கிடையில், நினா இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து கோல்ட்ஸ்டெயின் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
கணவரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி
திங்கட்கிழமை கோல்ட்ஸ்டெயினுடைய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்கள்.
இந்த மனுவை அளிக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது, நீங்கள் யார் என்று கோல்ட்ஸ்டெயினிடம் கேட்ட நீதிபதி Surya Kant, நீங்கள்தான் பிள்ளைகளின் தந்தை என்பதற்கான ஆதாரம் எதையாவது சமர்ப்பித்தீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, கோல்ட்ஸ்டெயின் பிரபலம் ஆவதற்காகவே மேல்முறையீடு செய்துள்ளதாக விமர்சித்த நீதிபதி Joymalya Bagchi, உங்கள் பிள்ளைகள் குகையில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்றும், நீங்கள் கோவாவில் தங்கியிருக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து, கோல்ட்ஸ்டெயின் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற நீதிபதிகள் அனுமதித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |