போருக்கு ஆதரவளிப்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா... வழக்குத் தொடுக்கும் WikiLeaks நிறுவனர்
நோபல் அறக்கட்டளைக்கு எதிராக சட்டப்பூர்வ புகார் அளித்துள்ளார் விக்கிலீக்ஸ் நிறுவனர் Julian Assange.
கொள்கைகளுக்கு எதிரானது
2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு பரிசுத்தோகை அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மச்சாடோவின் வெளிப்படையான ஆதரவு என்பது அமைதிக்கான நோபல் பரிசின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அசாஞ்சே வாதிடுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனம், நோபல் பரிசின் ஒரு பகுதியாக மச்சாடோ பெறவிருக்கும் 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை நோபல் அறக்கட்டளை விடுவிப்பதை அசாஞ்சே தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இந்தப் புகார் ஆல்ஃபிரட் நோபலின் உயிலை மேற்கோள் காட்டியுள்ளது. நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்திற்காகவும், இராணுவ நடவடிக்கைகளை ஒழிப்பதற்காகவோ அல்லது குறைப்பதற்கோ,
அமைதி மாநாடுகளை நடத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் மிகச் சிறந்த அல்லது சிறந்த பணிகளைச் செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை வழங்கிய நபர்களுக்கு மட்டுமே அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்படுகிறது.

சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் மச்சாடோவின் கருத்துக்களை குறிப்பிட்டு, அவர் அந்த தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதற்கான சான்றாக அசாஞ்சே சுட்டிக்காட்டுகிறார்.
CBS செய்தி ஊடகத்தில் ஞாயிறன்று கலந்துகொண்ட மச்சாடோ, தீவிரப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றுதல் உட்பட வெனிசுலா மீதான ட்ரம்பின் கடுமையான கொள்கைகளை மச்சாடோ வெளிப்படையாக ஆதரித்தார்.
கடமைகளை மீறியதாக
வெனிசுலாவுக்கு எதிரான ட்ரம்பின் நெருக்கடி என்பது பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் கப்பல் பறிமுதல்கள் மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கப்பல்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதும் அடங்கும்.

மச்சாடோவின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் நோபல் அறக்கட்டளை பரிசுடன் தொடர்புடைய எந்தவொரு நிதி விநியோகத்தையும் நிறுத்தி வைக்க போதுமான காரணங்களை வழங்குகிறது என அசாஞ்சே சுட்டிக்காட்டுகிறார்.
ஆல்பிரட் நோபலின் அமைதிக்கான நன்கொடையை போரை ஊக்குவிப்பதற்காக செலவிட முடியாது என்று அசாஞ்சே கூறியுள்ளார். அத்துடன், வெனிசுலாவிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் அதன் தீவிரப் போக்கைத் தொடர மச்சாடோ தொடர்ந்து தூண்டி வருகிறார் என்றும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மச்சாடோவுக்கு வழங்கப்படும் நோபல் நிதி, மோதலை உருவாக்குதல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை எளிதாக்குவதற்காக அவர்களின் தொண்டு நோக்கத்திலிருந்து திருப்பிவிடப்படலாம் என்று விக்கிலீக்ஸ் புகார் எச்சரிக்கிறது.
அப்படியான ஒரு சம்பவம் நடந்தால், ரோம் சட்டத்தின் பிரிவு 25(3)(c) இன் கீழ் ஸ்வீடன் அரசாங்கம் அதன் கடமைகளை மீறியதாக உறுதி செய்யப்படும் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |