தமிழக கபடி வீரர் களத்திலேயே திடீர் மரணம்! 22 வயதில் நேர்ந்த துயரம்
தமிழக மாவட்டம் கடலூரில் கபடி போட்டியில் விளையாடிய கல்லூரி மாணவர், களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மானடிக் குப்பத்தில் நேற்று இரவு கபடி போட்டி நடந்தது. இதில் பெரியபுறங்கணி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ் (22), தனது நண்பர்களுடன் கலந்துகொண்டார்.
சிறப்பாக விளையாடிய அவர், எதிரணி வீரர்களிடம் இருந்து தப்பிக்க தாவிக்குதித்து எல்லைக் கோட்டை தொட்டார். அவரை வீரர் ஒருவர் மடக்கினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த விமல்ராஜை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
puthiyathalaimurai
உடனடியாக அவரது நண்பர்கள், போட்டி நடுவர் உள்ளிட்ட அனைவரும் விமல்ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே விமல்ராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
puthiyathalaimurai
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விமல்ராஜின் தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர் கபடி விளையாடியபோது மயங்கி விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.