இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் காளியம்மாள்.
இவர் கட்சியில் இருந்து விலகப்போவதாக சமீபகாலமாக தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று அவரே விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கனத்த இதயத்துடன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.
எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
மேலும் பல விடயங்களை அறிக்கையில் கூறியுள்ள அவர், "எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |