இரண்டு ஆசிரியர்கள் தந்த தொல்லை! அப்பா, அம்மா மன்னிச்சுடுங்க.. மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம் வெளியானது
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகளான ஸ்ரீமதி படித்து வந்தார்.
கடந்த 13ம் திகதி மாணவி பள்ளியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற தொடர் போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுனர். இதனிடையே, 4வது நாளான நேற்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது.
மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ரீமதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதோடு அம்மா, அப்பா, சந்தோஷ், துர்கா உள்ளிட்ட சில பெயர்களை எழுதி என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழத்தையே உலுக்கியுள்ள இந்த வழக்கில் இந்த கடிதம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.