கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது! இறுதிச்சடங்கு நேரத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 13ம் திகதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17ம் திகதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், பெரிய கலவரத்தில் முடிந்தது.
மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தனது.
அவரது உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சற்றுமுன்னர் மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையிடையே உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொண்ட நிலையில் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது.
உயிரிழந்த பள்ளி மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் ஸ்ரீமதியின் உடலை பார்த்த அவர் தாயார், கண்ணும் கருத்துமா வளர்த்து இப்படி ஆயிடுச்சே. நான் நடை பிணம் ஆகிவிட்டேன்.
இனி உன்ன எப்போமா பார்ப்பேன்.. உன்னை கண்ணும், கருத்துமா வளர்த்தேனே... படிச்சி பெரிய ஆளா வருவேனு நினைச்சி வளர்த்தேனே.. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டேனே.. என் தங்கமே.. எப்படி எங்களை விட்டு பிரிஞ்சி போன.. தயவுசெய்து என் மகளை நல்ல முறையில் அடக்கம் பண்ண விடுங்க.. என் மகள என்னால மறக்க முடியல என கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.
இதனிடையில் ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியில் ஆம்புலன்ஸ் சிறிய விபத்தில் சிக்கியது, இதன் காரணமாக வாகனத்தின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அதே வாகனத்தில் மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் அருகே இருக்கும் பெரியநெசலூர் கொண்டு செல்லப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் சொந்த ஊருக்கு உடல் வந்தடைந்துவிடும் நிலையில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.