இதை செய்திருந்தால் ஸ்ரீமதிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்! கள்ளக்குறிச்சி மாணவி தங்கிய விடுதி குறித்து புதிய தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதி தொடர்பில் ஒரு பரபரப்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 13ஆம் திகதி ஸ்ரீமதி என்ற 17 வயதான மாணவி உயிரிழந்தார். அவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நிர்வாகம் கூறிய நிலையில் அதை ஸ்ரீமதியின் பெற்றோர் ஏற்கவில்லை.
அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்ட நிலையில் போராட்டமானது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.
இந்த நிலையில் மரணம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தனர்.
dailythanthi
அப்போது அந்தப் பள்ளியில் இயங்கி வரும் விடுதி தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீமதி தங்கி இருந்த பள்ளியின் விடுதியானது முறையான அனுமதி பெறாமல் முறைகேடாகச் செயல்பட்டு வந்துள்ளதாகக் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக எட்டு மாதங்களுக்கு முன்பே பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்ததாகவும் இருப்பினும், அதையும் தாண்டி விடுதி முறைகேடாகச் செயல்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளி விடுதியில் முறையாக விதிகள் கடைப்பிடித்திருந்தால் மாணவிக்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்றும் சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதனிடையில் ஸ்ரீமதி உடலுக்கு மறுபிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில் அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
அவரின் உடலை பெற்றுச் செல்ல அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் யாரும் நேற்று வரவில்லை.
இதனால், ஸ்ரீமதியின் உடல் நாட்கணக்கில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.