வதந்திகளை பரப்பாதீங்க…இதுதான் நடந்தது..! பாடகி கல்பனா ராகவேந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம்
சமீபத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தாக கூறப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி கல்பனா மருத்துவமனையில் அனுமதி
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
வதந்திகளும் விளக்கங்களும்
உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி: பாடகி கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவர் உயிரை மாய்த்துக் கொள் முயன்றதாக தகவல்கள் பரவின.
இதற்கு வீடியோ மூலமாக மறுப்பு தெரிவித்துள்ள பாடகி கல்பனா, தனக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகவும், அதிகப்படியான தூக்க மாத்திரைகள் உட்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
குடும்ப பிரச்சனை: கல்பனாவின் உயிரை மாய்த்து கொள்ள மேற்கொண்ட முயற்சிக்கு குடும்ப பிரச்சனைதான் காரணம் எனவும் வதந்திகள் பரவின.
இதுகுறித்து கல்பனா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தனக்கு கணவர் முழு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்பனா, தனக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகள் குறித்து விளக்கமளித்தார்.
தனக்கு 45 வயதாகிறது என்றும், மெனோபாஸ் நிலையை நெருங்கி வருவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜனவரி மாதம் முதல் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும், அதோடு சட்டப் படிப்பும் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் மயங்கி விழுந்ததாகவும், தனது கணவர் உடனே காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்து வரவழைத்ததாகவும் கூறினார்.
அத்துடன் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், சினிமா துறையை சேர்ந்தவர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |