உக்ரைன் அகதிகள் குறித்த கேள்வி! சிரித்த தமிழ்வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ்.. சலசலப்பை கிளப்பிய வீடியோ
உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்களை அமெரிக்கா அதிக அளவில் ஏற்குமா என்ற கேள்விக்கு தமிழ் வம்சாவளி பெண்ணான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் பலமாக சிரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவுடன் கமலா பேசும் போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. "உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அரசு தயாராக உள்ளதா?" என்று ஒரு பத்திரிகையாளர் ஹாரிஸிடம் கேட்கிறார்.
"மேலும் அதிக எண்ணிக்கையிலான அகதிகளை அமெரிக்கா அழைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் அமெரிக்க அரசிடம் வலியுறுத்தினீர்களா?," என்று போலாந்து அதிபர் டுடாவிடம் அவர்கள் கேட்டனர்.
.@VP Harris awkwardly starts laughing when asked about the Ukrainian refugee crisis pic.twitter.com/SIHhiLbK6X
— Tom Elliott (@tomselliott) March 10, 2022
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர். "A friend in need is a friend indeed,” என்று சத்தமாக சிரித்துக்கொண்டே மேடையில் இருந்த கமலா ஹாரிஸ் கூறினார்.
சிறிது நேர சிரிப்பலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து கேள்விக்கு பதிலளித்தனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கும் உக்ரேனிய அகதிகள் அவர்களுடன் தங்குவதற்கு தூதரக செயல்முறையை விரைவுபடுத்த உதவுமாறு ஹாரிஸைக் கேட்டுக் கொண்டதாக டுடா உறுதிப்படுத்தினார்.
ஆனால் அவர்களின் பதிலை விட, அவர்களின் சிரிப்புதான் பேச்சுப்பொருளானது. போர் காரணமாக உக்ரைன் மக்கள் தவிக்கும் நிலையில் அவர்களை அரவணைப்பது தொடர்பான கேள்விக்கு சிரிப்பது சரியில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் அவர்கள் அகதிகளை பற்றி சிரிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.