ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்! கமல்ஹாசன் அறிக்கை
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூட ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அறிக்கை ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதில் ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குலைக்கிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் pic.twitter.com/h5YuGDxuQG
— Kamal Haasan (@ikamalhaasan) May 26, 2021
இந்த பிரச்சினையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிய பிரச்சினையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதை காண்கிறேன்.
குற்றத்தின் தீவிரத்தை பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது குற்றவாளிக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் உள்ளது.
குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.