பாகிஸ்தானில் பேருந்தில் சென்ற கால்பந்து வீரர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை
karachi football team robbed at gunpoint on balochistan: பாகிஸ்தானில் பேருந்தில் சென்ற கராச்சி மேற்கு மாவட்ட கால்பந்து அணி வீரர்களிடம் கும்பல் ஒன்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளது.
கால்பந்து வீரர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் நடைபெற உள்ள முதலமைச்சர் தங்க கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக கராச்சி மேற்கு மாவட்ட கால்பந்து அணி செப்டம்பர் 28 ஆம் திகதி பேருந்து மூலம் கராச்சியிலிருந்து குவெட்டா நோக்கி பயணித்துள்ளது.

பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் மஸ்துங் மற்றும் சாரிப் இடையே பயணித்த போது மாலை நேரத்தில், துப்பாக்கிகள் ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல் பேருந்தை மறித்துள்ளது.
கால்பந்து வீரர்களை வலுக்கட்டாயமாக இறங்க கூறிய அந்த கும்பல் அவர்களிடமிருந்த ரொக்க பணம், மொபைல் போன்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை பறித்துள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த சிலரை துப்பாக்கியின் பின்பகுதியால் அந்த கும்பல் தாக்கியுள்ளது.
அந்த அணி குவெட்டா சென்ற பின்னர் இந்த கொள்ளைச்சம்பவம் குறித்து பலுசிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்ளையால் வீரர்கள் பணமின்றி தவித்ததாகவும், அமைச்சர் தலையிட்டு, அந்த அணிக்கு தினசரி உதவித்தொகையை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிந்து கால்பந்து சங்கத்தின் செயலாளர் முகமது அஸாம், "நாங்கள் சிந்து அணியை அனுப்பவில்லை.
பாதுகாப்புச் சூழல் காரணமாக கராச்சியில் உள்ள மற்ற அனைத்து கிளப்புகளையும் பேருந்திலோ அல்லது ரயிலிலோ குவெட்டாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினோம். இருந்தபோதிலும், கராச்சி மேற்கு அணி சென்றது, நாங்கள் அஞ்சியது போலவே நடந்தது.
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா கால்பந்து சங்கங்களும் இப்போட்டிக்கு அணிகளை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளது" என கூறினார்.
மஸ்துங்கையும் குவெட்டாவையும் இணைக்கும் நெடுஞ்சாலைப் பகுதியில் பயணிக்கும் பயணிகள் அந்த பகுதியில் செயல்படும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.