கருணாநிதி சமாதி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.., கொந்தளித்த அண்ணாமலை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை கோவில் கோபுரத்தை போல அலங்கரித்ததால் முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அப்போது கருணாநிதியின் சமாதியின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் போல மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |