வேண்டுமென்றே தாமதமாக வந்த விஜய்; உயிர்ச்சேதம் குறித்து எச்சரித்தும் கேட்கவில்லை - எப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்
கரூர் தவெக தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் எப்.ஐ.ஆரில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
காவல்துறை சார்பில் விசாரிக்க கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக கரூர் கூடுதல் டிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை
இந்நிலையில், கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக கரூர் காவல்துறை சார்பில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்(FIR) பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில், "“குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும், அதிக கூட்டத்தைக் காட்டி அரசியல் பலத்தை காட்டும் நோக்கில், வேண்டுமென்றே நிர்வாகிகள் திட்டமிட்டு, விஜய் வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர்.
வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்கள் கூட்டத்தின் நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்தனர்.
அனுமதி இல்லாமல் ரோடு ஷோ நடத்தி, ராங் ரூட்டில் வாகனத்தை இயக்கி, நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனால், நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும் சோர்வடைந்தனர்.
தவெக தொண்டர்களை, நிர்வாகிகள் ஒழுங்குபடுத்தாமல், சாலைக் கடைகளின் தகர கொட்டகைகள், மரங்களில் ஏறி உட்காரச் செய்ததால், கொட்டகை உடைந்து, மரம் முறிந்து அதில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர்.
பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவியது. போதுமான அளவு தண்ணீர், மருத்துவ வசதி இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு அடைந்தனர்.
அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்தும், உயிர்ச்சேதம் ஏற்படும் சூழல் உருவாகலாம் என பலமுறை எச்சரித்தும் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |