காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; 27 பேர் பலி - தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹால்காம் பகுதி அங்குள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கோடை விடுமுறையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு வருகை தருவது உண்டு.
பஹால்காம் தாக்குதல்
அதே போல், இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை, பஹால்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 25 பேர் பலியானதாகவும், அதில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
"நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது" என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
The terrorist attack in #Pahalgam, Jammu and Kashmir, that targeted innocent tourists and claimed multiple precious lives is a barbaric act that shocks the conscience. It deserves the strongest condemnation. My thoughts are with the bereaved families.
— M.K.Stalin (@mkstalin) April 22, 2025
I am deeply saddened to…
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் விரையும் அமித்ஷா
இதனிடையே, அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இது தொடர்பாக தொலைபேசியில் உரையாடி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், ஒரு திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.