நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல்
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தலைமறைவான நடிகை கஸ்தூரி ஆந்திராவில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆந்திராவில் கஸ்தூரி?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தெலுங்கர்கள் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த கஸ்தூரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, தலைமறைவான கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |