இலங்கை செல்லும் பிரதமர் மோடி - கச்சதீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
கச்சதீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கை செல்லும் மோடி
இந்திய பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி அரசு முறை பயணமாக இலங்கை செல்கிறார்.
இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேச உள்ள மோடி, அங்கு இந்தியா உதவியுடன் செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக சட்டபேரவையில் தீரமானம் கொண்டு வரப்பட்டது.
கச்சதீவை மீட்க தீர்மானம்
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
கச்சத்தீவு மீட்பே சரியான வழி
இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஆனாலும், பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதோடு, படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்.
இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.
இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது" என பேசினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்த தீர்மானம் மீது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாடினார்கள். இது தீர்மானத்தின் மீது பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ""கச்சத்தீவு தாரைவார்க்கப்பட காங்கிரசும், திமுகவுமே காரணம். இருந்தாலும், தமிழக மீனவர்களின் நலன் கருதி இந்த தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறது" என பேசினார்.
13 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த போது கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |