சட்டப்படி புலம்பெயர்ந்தவர்களையும் நாடுகடத்தவேண்டும்: பிரித்தானிய அரசியல்வாதியின் கருத்தால் சர்ச்சை
பிரித்தானியாவில் சட்டப்படி குடியமர்ந்து வாழும் புலம்பெயர்ந்தவர்களையும் நாடுகடத்தவேண்டும் என்று கூறியுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சர்ச்சைக் கருத்து வெளியிட்ட பெண்
கன்சர்வேட்டிவ் கட்சியின் வருங்காலத் தலைவர் ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கேற்றி லாம் (Katie Jane Lotte Lam, 34) என்னும் பெண் நாடாளுமன்ற உறுப்பினரே இப்படி ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.
Sunday Times என்னும் ஊடகத்துக்கு பேட்டி அளித்த கேற்றி, சட்டப்படி நம் நாட்டுக்கு வந்த ஒரு பெருங்கூட்டம் மக்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் நம் நாட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது.
அது அவர்கள் தவறல்ல, ஆனாலும், அவர்கள் நம் நாட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று கூறியுள்ள கேற்றி, அவர்களும் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்.
அப்போதுதான், ஒத்தக் கலாச்சாரம் கொண்ட பெரும்பாலான மக்கள் கொண்ட ஒரு நாடாக நம் நாடு மாறும் என்று கூறியுள்ளார்.
அதற்காக அவர் பயன்படுத்திய பதம், culturally coherent என்பதாகும். அதாவது, படித்தவர்கள் படித்தவர்களுடன் மட்டும் இணைந்திருத்தல், ஒரே நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்திருத்தல் என்பது அதன் பொருளாகும்.
கேற்றியின் இந்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரது கருத்துக்களை விமர்சித்துவருகிறார்கள்.