கோப்பைகளை வைக்க கூட வீட்டில் இடமில்லை - ஏழ்மையிலும் 3 தங்கம் வென்ற சென்னை பெண்
கேரம் உலகக்கோப்பை போட்டியில், சென்னையை சேர்ந்த கீர்த்தனா 3 தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
3 தங்கம் வென்ற சென்னை பெண்
7ஆவது கேரம் உலகக்கோப்பை போட்டி, மாலத்தீவில் கடந்த டிசம்பர் 2ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்திய அணியில், தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.
காசிமா, கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பையில் மகளிர் 3 பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
இதில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய 3 பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
காசிமா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களும், மித்ரா ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களும், அப்துல் ஆசிக் ஒரு தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர்.

பதக்கங்களுடன் நேற்று விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டு கேரம் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோப்பைகளை வைக்க வீட்டில் இடமில்லை
21 வயதான கேரம் சாம்பியன் கீர்த்தனா சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த கீர்த்தனாவின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர், கீர்த்தனாவின் தாய் இந்திராணியே வீட்டு வேலை செய்து 2 மகன் மற்றும் ஒரு மகளை வளர்த்து வருகிறார்.
ஏழ்மை குடும்பத்தில் இருந்த வந்த கீர்த்தனா தனக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய கீர்த்தனா, "மற்ற வீட்டில் பணம் இல்லையென்றால் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் என் தாய் தன்னுடைய நகைகளை அடகு வைத்து எனக்கு விளையாட பணம் வழங்கினார்.

நான் அதை நேரில் பார்த்துள்ளேன். அதை பார்க்கும் போது எனக்கு கண்கள் கலங்கும். வெற்றியோ தோல்வியோ, மகள் ஆசைப்பட்டால் என்பதற்காக பணம் வழங்கினார்கள்.
எனக்காக இவ்வளவு காலம் கஷ்டப்பட்ட அவர்களை இனி நான் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் படுக்க கூட இடம் கிடையாது. இப்போது நான் வென்று வந்துள்ள கோப்பைகளை வைக்க கூட வீட்டில் இடம் இருக்காது.
இதனால் நான் வாங்கிய பாதி கோப்பைகள் கேரம் கிளப்பில் தான் இருக்கும். எனவே எனக்கு அரசு வேலையும், வீடு கட்ட உதவியும் செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |