நடுங்கவைத்த லெபனான் பேஜர் வெடிப்பு... விசாரணை வட்டத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர்
லெபனானில் 12 பேர்கள் கொல்லப்பட்ட பேஜர் வெடிப்பு சம்பவத்தில் நார்வேயை சேர்ந்த இந்திய வம்சாவளி நபரும் விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரின்சன் ஜோஸ் என்பவருக்கு
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தி வந்த பேஜர்கள் திடீரென்று ஒவ்வொன்றாக வெடித்தது. இதில் 12 பேர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பினர்.
இந்த விவகாரத்தில் தற்போது நார்வே குடிமகனான ரின்சன் ஜோஸ் என்பவருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இவருடன் பல்கேரியாவை சேர்ந்த 37 வயது நபரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேஜர்களை வழங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தைவானை சேர்ந்த Gold Apollo என்ற நிறுவனம் தயாரித்த இந்த பேஜர்களில் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு 3 கிராம் அளவுக்கான வெடிக்கும் கருவியை பொருத்தியதாக தகவல் வெளியானது.
ஆனால், Gold Apollo நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லா பயன்படுத்தும் பேஜர்கள் அனைத்தும் ஹங்கேரியில் புடாபெஸ்ட் நகரில் செயல்படும் ஒரு நிறுவனம் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நார்வே பொலிசார்
இந்த நிலையில் பல்கேரியா அரசாங்கமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இதில் பல்கேரிய நிறுவனத்தின் பெயர் Norta Global Ltd எனவும் 2022ல் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தை நிறுவியவர் நார்வேயை சேர்ந்த ரின்சன் ஜோஸ் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆனால் வெள்ளிக்கிழமை பல்கேரிய அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் வெடித்த பேஜர்கள் எதுவும் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எவரும் ஹிஸ்புல்லா அமைப்புடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தற்போது ரின்சன் ஜோஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என நார்வே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |