காஷ்மீர் ஹொட்டலில் உணவு தயாரிக்க தாமதமானதால் உயிர் தப்பிய கேரளக் குடும்பம்
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, தாங்கள் உயிர் தப்பியதற்கு, தாங்கள் ஹொட்டல் ஒன்றில் சாப்பிட்ட, உப்பு அதிகமான உணவு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளது.
உயிர் தப்பிய கேரளக் குடும்பம்
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த லாவண்யா, தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பஹல்காமில் தாக்குதல் நடந்த அன்று, அங்கு நடந்ததை அறியாமல் பஹல்காமை நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளது லாவண்யாவின் குடும்பம்.
அப்போது, மலை ஒன்றிலிருந்து ஒரு கூட்டம் குதிரைகள் பயந்து ஓடிவந்துகொண்டிருப்பதை லாவண்யா குடும்பத்தினர் கண்டுள்ளார்கள்.
ஒன்றும் புரியாமல் தொடர்ந்து அவர்கள் பயணிக்க, பஹல்காமிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த வாகனங்களிலிருந்தவர்கள், பஹல்காமுக்கு போகாதீர்கள் என அவர்களை தடுக்க, ஒன்றும் புரியாமல் அவர்கள் திரும்பும்போதுதான், உறவினர்கள் அவர்களை மொபைலில் அழைத்து பஹல்காம் தாக்குதல் குறித்து கூறியிருக்கிறார்கள்.
ஹொட்டலில் ஏற்பட்ட தாமதம்
தாங்கள் உயிர் தப்பியதற்கு தன் கணவரும், தாங்கள் ஹொட்டலில் சாப்பிட்ட உணவும்தான் காரணம் என்கிறார் லாவண்யா.
அதாவது, அவர்கள் பஹல்காம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, லாவண்யாவின் கணவர் ஒரு ஹொட்டலில் வண்டியை நிறுத்தி சாப்பிடவேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார்.
அதன்படி அவர்கள் அங்கு சாப்பிடச் செல்ல, அந்த ஹொட்டலில் பரிமாறப்பட்ட Mutton Rogan Josh என்னும் காஷ்மீரி ஆட்டுக் கறியில் உப்பு அதிகம் இருந்துள்ளது.
அது குறித்து அவர்கள் உணவக ஊழியர்களிடம் கூற, அவர்கள் புதிதாக மீண்டும் அந்த உணவை சமைத்துத் தருவதாகக் கூறியதுடன், தயவு செய்து சாப்பிட்டுச் செல்லுங்கள் என வற்புறுத்த, அங்கேயே சுமார் ஒன்றரை மணி நேர தாமதமாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த உனவகத்துக்குச் செல்லாமல் இருந்திருந்தால், அல்லது அங்கு உணவில் உப்பு அதிகமானதால் தாமதம் ஏற்படாதிருந்தால், தாங்கள் பஹல்காமுக்கு திட்டமிட்ட நேரத்துக்குச் சென்றிருப்போம் என்கிறார் லாவண்யா.
ஆக, தன் தன் கணவரும், தாங்கள் ஹொட்டலில் சாப்பிட்ட உப்பு அதிகமான உணவும்தான், இப்போது தாங்கள் அனைவரும் உயிருடன் இருக்கக் காரணம் என்கிறார் லாவண்யா!