கேரளா ஹேமா கமிட்டி விவகாரம்: ஆவேசமாக பேசிய சரத்குமார்
கேரள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வன்புணர்வு கொடுமைகள் கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் நடைபெற்றுள்ளது என்று தமிழ் நடிகைகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சரத்குமார் பேசியது
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், "ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள 281 பக்கங்களில் 160 பக்கங்களை நான் படித்துவிட்டேன். இதுபற்றி ஏனோ தானோ என்று நான் பேச விரும்பவில்லை. விலாவாரியாக பேச வேண்டும்.
சினிமா துறை மிக மோசமாக உள்ளதாகவும், வன்புணர்வு கொடுமை அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கையில் சொல்லவில்லை. இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.
மலையாள சினிமாவில் உள்ள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா, இல்லையா என்பதை நிரூபிப்பது அவர்களின் கடமை.
கேரளாவில் நடிகைகள் கேரவனில் கமெரா இருப்பதாக எனது மனைவி கூறியிருந்தார். இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர்.
அனைவராலும் அப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. இதற்காக தான் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை நாம் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி சொன்னது போல கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |