இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்- நெகிழ்ச்சி சம்பவம்
இந்து பெண்ணுக்கு இஸ்லாமியர் இறுதிச்சடங்கு செய்த விடயம் இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்து பெண் உயிரிழப்பு
இந்தியா உலக அரங்கில் மதசார்பற்ற நாடாக விளங்கி வருகிறது. அதற்கான சமீபத்திய சான்றாக கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராகி( Rakhi) என்ற பெண், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள குதிரவட்டம் மனநல மையத்தில் முதலில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சற்று குணமடைந்ததும், திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில், லத்தீன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் பெனடிக்ட் மென்னி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவர் மரணிப்பதற்கு சில காலத்திற்கு முன்னர், தனக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என அங்குள்ள கன்னியாஸ்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தன்னுடைய குடும்பத்தினர் குறித்த எந்த நினைவும் இல்லை. இதனால், மனநல மைய ஊழியர்களால், அவரின் பெயர் மற்றும் சொந்த மாநிலம் தவிர எதையும் கண்டறிய முடியவில்லை.
இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்
ராகியின் இறுதி ஆசை குறித்து, மனநல மையத்திற்கு அடிக்கடி வந்து அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறி வரும் கதினம்குளம் பஞ்சாயத்தில் உள்ள சித்தட்டுமுக்கு வார்டு கவுன்சிலர் சஃபீர் என்பவரிடம் இதனை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சஃபீர் ராகியின் மகன் என்ற நிலையில் இருந்து, ஹிந்து முறைப்படி அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.
சஃபீருக்கு இது முதல்முறை இல்லை. கடந்த 2 வாரத்திற்கு முன்னர் இதே போல் உயிரிழந்த இந்து மதத்தை சுதக்ஷினா என்ற பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.
இது குறித்து பேசிய சஃபீர், யாரேனும் ஒருவர் தனது கடைசி ஆசையை சொல்லும் போது, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அதைதான் எனது மதம் எனக்கு போதித்துள்ளது. நான் சரியாக செய்தேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது எந்தக் கடவுளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்.
தகன கூடத்தில் இருந்த ஊழியர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். நான் இது குறித்து எனது ஜாமத்தில் உள்ள இமாமிடம் தெரிவித்த போது, இறந்த ஒருவரை உங்கள் சொந்தமாகக் நினைத்து நீங்கள் சரியானதைச் செய்தீர்கள் என பாராட்டினார்.
என் இளவயதில் இதுபோன்ற செயல்கள் பொதுவானவை; யாரும் இவற்றை சிறப்பு என்று நினைத்ததில்லை. இப்போது, மதச்சார்பின்மை ஒரு அரிதான விடயமாகிவிட்டதால், மனிதாபிமானம் கொண்ட ஒன்றைச் செய்யும்போது, அது கவனத்தை ஈர்க்கிறது" என கூறினார்.
2023 ஆம் ஆண்டில், தி கேரள ஸ்டோரி என்ற பெயரில் வெளியான திரைப்படம், கேரளாவை சேர்ந்த இஸ்லாமியர்களை மதசார்பின்மையற்ற தவறானவர்களாக சித்தரித்தது. தற்போது இந்த விடயம் குறித்து அறிந்த நெட்டிசன்கள் இதுவே உண்மையான கேரள ஸ்டோரி என சஃபீரை பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |