கேரள செவிலியரின் மரண தண்டனை தள்ளிவைப்பு: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
ஏமன் நாட்டில், கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற கேரளப்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34), 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலைக்கு சேர்ந்தார்.
ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவர் முதலில் நிமிஷாவுக்கு உதவிய நிலையில், பின் அவரை துன்புறுத்தத் துவங்கி, அவரது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிவைத்துக்கொண்டுள்ளார்.
எப்படியாவது அவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி இந்தியாவுக்கு வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, அவருக்கு மயக்க ஊசி போட, துரதிர்ஷ்டவசமாக மயக்க மருந்தின் அளவு அதிகமாக, மஹ்தி உயிரிழந்துள்ளார்.
மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மரண தண்டனை தள்ளிவைப்பு
இந்நிலையில், நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை, அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி, நிமிஷாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், ஏமன் அதிகாரிகள் தண்டனையை தள்ளிவைத்துள்ளதாக அரசை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக PTI மற்றும் ANI ஆகிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
In the case of Nimisha Priya, it has been learnt that the local authorities in Yemen have postponed the execution scheduled for July 16, 2025. Government of India, which has since the beginning of the case been rendering all possible assistance in the matter, has made concerted…
— ANI (@ANI) July 15, 2025
ஏமன் நாட்டைப் பொருத்தவரை இந்த விடயம் ஒரு சென்சிட்டிவான விடயம் என்றாலும், அதையும் மீறி இந்திய அதிகாரிகள், உள்ளூர் சிறை அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் அலுவலகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பிலிருந்ததைத் தொடர்ந்து, இந்த தண்டனை தள்ளிவைப்பு சாத்தியமாகியுள்ளது என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை மரணதண்டனை நிறைவேற்றப்பட இருந்ததால் கலக்கத்திலிருந்த நிமிஷாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அவர்களது தண்டனையைக் குறைக்க முயன்றுவரும் அனைவருக்கும் இந்த செய்தி பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |