மரணப்படுக்கையிலும் காதலியை காட்டிக்கொடுக்காத ஷரோன்.., கிரிஷ்மாவுக்கு திருந்திவாழ வாய்ப்பு கொடுக்காதது ஏன்?
கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு உச்ச தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி என்ன?
தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ்.
கடந்த 2021-ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த கிரிஷ்மா, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கிரிஷ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார்.
பின்னர், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நினைத்த கிரிஷ்மா, பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.
பின்னர், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்த கிரிஷ்மா, அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என குடிக்க வைத்தார்.
பின்னர், வீட்டிற்கு சென்றதும் இரவு பலமுறை ஷரொன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலே உடல் பாகங்கள் செயல் இழந்து அவர் உயிரிழந்தார்.
பின்னர், அவரது குடும்பம் கிரிஷ்மா மீது புகார் அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் கிரிஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, இந்த வழக்கில் கிரிஷ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏன் மரண தண்டனை?
இதில், மரண தண்டனை தேவையற்றது என்றும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கிரிஷ்மா தரப்பில் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஷரோனை மட்டுமல்ல, காதலின் உன்னத உணர்வையும் சேர்த்தே கிரிஷ்மா கொலை செய்துள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஷ்மா மீதுள்ள காதலால் 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கையில் இருந்த ஷரோன், அந்த நேரத்தில் கூட காதலியை காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நீதிபதி பஷீர் சுட்டிக்காட்டினார்.
ஷரோன் துரோகத்தை எதிர்கொண்டாலும், கிரிஷ்மாவுக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்று நினைத்ததாக தனது 586 பக்க தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், ஷரோனுக்கு கிரிஷ்மா பெரும் துரோகத்தை இழைத்ததாகவும், 48 சூழ்நிலை ஆதாரங்களை மேற்கோள் காட்டியும், அதிகபட்ச தண்டனை தருவதில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கமான உறவில் இருந்து கொண்டே அவருக்கு விஷம் கொடுத்துள்ளார். அதற்கு விஷம் கலந்த ஜூஸில் சேலஞ்ச் செய்த சம்பவம் சான்று என்றார்.
மேலும், உள் உறுப்புகள் செயலிழந்து ஷரோன் இறந்தார் என்ற மருத்துவ அறிக்கை அடிப்படையில், இது திட்டமிடப்பட்ட கொலை என்பது உறுதியாகிறது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதோடு, வயது, கல்விதகுதி, குற்றவியல் வரலாறு இல்லாமை, பெற்றோருக்கு ஒரே மகள் போன்ற காரணங்களுக்காக தண்டனையை குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகைப்படங்களை காட்டி ஷரோன் மிரட்டினார் என்பதற்கான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்ற காவல்துறை விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதில், நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் அழ தொடங்கிய கிரிஷ்மா, மரண தண்டனையை அறிவிக்கவும் அழுகையை நிறுத்தி மௌனமானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |