ஆண் துணை இல்லாமல் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததால் கேரள பெண் கைது
kerala vlogger arunima arrest claim in afghanistan: ஆண் துணை இல்லாமல் பயணம் செய்ததால் ஆப்கானிஸ்தானில் கேரள பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கேரள பெண்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
ஆண் துணையின்றி பெண்கள் வெளியே செல்லக்கூடாது என தலிபான்கள் பல்வேறு சட்டங்களை பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பேக்பேக்கர் அருணிமா(Backpacker Arunima) என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார்.

ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டுப் பயணித்து இரவு 7 மணியளவில் பாமியானை அடைந்த அவரை உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் அணுகியுள்ளனர்.
கடவுச்சீட்டு, விசா மற்றும் பயண அனுமதியைச் சரிபார்த்த அதிகாரிகள், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒரு ஆண் துணையுடனோ அல்லது வழிகாட்டியுடனோதான் பயணிக்க வேண்டும் என்ற விதியை அவர் மீறிவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆண் துணை இல்லாததால் அவருக்கு பாமியானில் அனுமதி சீட்டு வழங்கப்படாத நிலையில், அனுமதி சீட்டு இல்லாத அவரை கைது செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் ஆப்கானிஸ்தானின் பாமியானில் ஆபத்தில் உள்ளதாகவும், இந்திய தூதரகம் குறித்து யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன் பின்னர் பாம்யானை அடைய தனக்கு உதவிய நபரை தொடர்பு கொண்ட பின்னர் அந்த நபர், தனக்காக அதிகாரிகளிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அனுமதி சீட்டு இல்லாமல் இவ்வளவு நாட்கள் ஆப்கானிஸ்தானில் பயணம் செய்ததற்காக அவருக்கு அபராதம் விதித்து, விடுவித்துள்ளனர்.
தான் இங்கிருந்து உஸ்பெஸ்கிஸ்தானுக்கு செல்ல உள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அனுமதி இல்லாமல் அடுத்த நாட்டிற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படாத ஒரு நாட்டில், ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்ததுதான் நான் செய்த குற்றம் ஒவ்வொரு மாகாணத்திற்கும் அனுமதி தேவை.
தனியாகப் பயணம் செய்யும் ஒரு பெண்ணுக்கு அவர்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என்பதால், நான் அந்த அனுமதிகளைப் பெறவில்லை. நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
என் ஆண் நண்பர்கள் பலர் இந்த நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.
இங்கு அவர்களின் முடிவுகளே சட்டங்கள். இங்கு காவல்துறையோ, சிறைச்சாலையோ அல்லது அது போன்ற எதுவும் இல்லை. இங்குள்ள தலிபான்களைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் ஒரு தலிபான்தான். அதற்காக எல்லோரும் தலிபான்கள் என்று அர்த்தமல்ல.
நான் அந்த மனிதனின் கைகளையும் கால்களையும் பிடித்துக்கொண்டு அவரிடம் கெஞ்சினேன், அதனால்தான் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை.
சில மணிநேரங்களுக்கு, நான் உண்மையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இறந்துவிடுவேன் என்று உணர்ந்தேன்" என தெரிவித்துள்ளார்.