பதற வைக்கும் சம்பவம்... பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண் மற்றும் குழந்தைகளின் புகைப்படம் வெளியானது
பிரித்தானியாவின் கெற்றரிங் பகுதியில் கொல்லப்பட்ட தாயார் மற்றும் இரு இளம் பிள்ளைகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை நார்தம்ப்டன்ஷையர் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பெண்ணின் கணவர் கைது
குறித்த கொலை சம்பவம் தொடர்பில், பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் 35 வயது அஞ்சு அசோக் எனவும், இவரது மகன் 6 வயது ஜீவா சாஜு எனவும் மகள் 4 வயது ஜான்வி சாஜு எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் 52 வயதான சாஜு தற்போது பொலிஸ் விசாரணை மற்றும் காவலில் உள்ளார். அஞ்சு அசோக் பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார் என்றே பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அஞ்சு சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். ஜீவா மற்றும் ஜான்வி ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பதற வைக்கும் தகவல்
இந்திய மாநிலம் கேரளத்தை சேர்ந்த அஞ்சு அசோக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை நடுங்க வைத்துள்ளது. பலரும் பதற வைக்கும் தகவல் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
2012ல் சாஜு மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. 2021 அக்டோபரில் இருவரும் பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர். கேரளாவில் சாரதியாக பணியாற்றி வந்துள்ள சாஜுவுக்கு, பிரித்தானியாவில் சாரதியாக பணியாற்ற முடியாமல் போனதுடன், நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.
இது சாஜுவுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மனைவியிடம் அடிக்கடி கோபப்படுவதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார் என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@PA