தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காலிஸ்தான் சுவரொட்டிகள்: கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை
இந்தியாவுக்கு எதிரானவர்களின் அடையாளமாக மாறியுள்ள காலிஸ்தான் அமைப்புகளுக்கு இடம் கொடுப்பதற்கு எதிராக கனடாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருதரப்பு உறவுகளுக்கோ நல்லதல்ல
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதர்களின் பெயர்கள் மற்றும் படங்களுடன் மிரட்டல் சுவரொட்டிகளை வெளியிட்டதை அடுத்து இந்தியாவின் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் நாடுகளுக்கிடையேயான உறவுகளை பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
"எங்களுடைய நட்பு நாடுகளான கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் காலிஸ்தானின் செயல்பாடுகள் சில சமயங்களில் நடைபெறுகின்றன. இந்நிலையில், அந்நாடுகளுக்கு காலிஸ்தானிக்கு இடம் கொடுக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களின் தீவிரவாத எண்ணங்கள் எமக்கோ, அந்த நாடுகளுக்கோ அல்லது இருதரப்பு உறவுகளுக்கோ நல்லதல்ல” என்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
காலிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகள்
கனடாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி, உயர் ஆணையர் சஞ்சய் வர்மா மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோரின் படங்கள் மற்றும் பெயர்கள் கொண்ட காலிஸ்தான் ஆதரவு சுவரொட்டி கனடாவில் வெளியாகியுள்ளது.
கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக் குருத்வாரா சாஹிப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஜூன் 18-ஆம் திகதி காலிஸ்தான் புலிப் படைத் தலைவர் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத இருவரால் கொல்லப்பட்டதை அடுத்து இந்தப் போஸ்டர் வந்துள்ளது.
சுவரொட்டியில் இந்தியப் பிரதிநிதிகளை 'கொலையாளிகள்' என்று வர்ணித்துள்ளனர். இந்நிலையில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவு பேரணியை அறிவிக்கும் சுவரொட்டிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காலிஸ்தான் சுதந்திரப் பேரணி ஜூலை 8-ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் என்று அந்தச் சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. பேரணி கிரேட் பஞ்சாப் வணிக மையத்திலிருந்து தொடங்கி ரொறண்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் முடிவடையும் என்று சுவரொட்டி கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |