24 பில்லியன் டொலரை விடுவியுங்கள் - ட்ரம்பிற்கு ஈரான் வைக்கும் நம்பிக்கை சோதனை
அமெரிக்கா 24 பில்லியன் டொலரை விடுவிக்க வேண்டுமென மொஜ்தபா கமேனியின் இராணுவ ஆலோசகரான ரெஸாயி தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர்
அமெரிக்கா - ஈரான் இடையே 6 வார காலமாக போர் நடைபெற்று வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இரு நாடுகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு கட்டங்களாக அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போது போர் நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றன.
அமெரிக்க வான்படை ஈரானின் கார்க் மற்றும் கெஷ்ம் தீவில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
24 பில்லியன் டொலர் நம்பிக்கை சோதனை
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் இராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெஸாயி அளித்த பேட்டி ஒன்றில், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் 24 பில்லியன் டொலர்களை விடுவிப்பது டிரம்ப் மீது ஈரான் வைக்க விரும்பும் நம்பிக்கையின் ஒரு சோதனையாகும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் உள்ளன, இந்த முட்டுக்கட்டையை டிரம்ப் உடைக்க வேண்டும். முடிவு எடுக்கும் அதிகாரம் இப்போது அவரிடமே உள்ளது.

அவர் ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்பினால், ஒரு இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முடக்கப்பட்ட 12 பில்லியன் டொலர் நிதியை முதலில் விடுவிக்க வேண்டும். அதைதொடர்ந்து மேலும், 12 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்க வேண்டும்.
இந்த 24 பில்லியன் டாலர் என்பது, டிரம்ப் மீது ஈரான் வைக்க விரும்பும் நம்பிக்கைக்கான ஒரு சோதனையாகும். இது அமெரிக்கா தேர்ச்சி பெற வேண்டிய ஒரு சோதனை, அதன் பிறகு பாதை திறக்கப்படும். இது எங்களுடைய பணம், அமெரிக்காவின் பணம் அல்ல.
ராஜதந்திர முயற்சிகள் தோல்வியில் முடிந்து அமெரிக்கா மீண்டும் மோதலைத் தொடங்கினால், ஈரான் இந்தப் போரை பாரசீக வளைகுடாவிற்கு அப்பால் இழுத்துச் செல்லும்.
ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியப் பெருங்கடல், பாப் அல்-மண்டாப் ஜலசந்தி, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வரை ராணுவ நடவடிக்கைகள் விரிவடையக்கூடும்.
அமெரிக்கா ஈரான் மீது படையெடுக்க படையெடுத்தால், ஈரானின் உண்மையான திறன்களை உலகம் புரிந்துகொள்ளும். ஏனெனில், நமது ஏவுகணைகளை விட நமது தரைப்படை பல மடங்கு பெரியது" என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |