மறைந்த உயர் தலைவரின் இறுதிச் சடங்கு, நல்லடக்கத் திகதி குறித்த தகவலை வெளியிட்ட ஈரான்
ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் எப்போது தொடங்கும் என்றும், அவரது உடல் எங்கே நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மஷ்ஹத்தில் நல்லடக்கம்
ஈரானிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 4 ஆம் திகதி தெஹ்ரானில் தொடங்கும் எனவும், அவரது உடல் ஜூலை 9 ஆம் திகதி சொந்த ஊரான மஷ்ஹத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இறுதிச் சடங்குகள், ஈரானுடனான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போர் நீடித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஜூலை 4 முதல் தெஹ்ரானில் மூன்று நாட்களும், ஜூலை 7 அன்று புனித நகரமான கோமில் மற்றொரு நாளும் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
86 வயதான அலி கமேனி, கடந்த பிப்ரவரியில் அவரது குடியிருப்பு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
குறித்த தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியது என்ற தகவல் கசிந்திருந்தாலும், சர்வதேச செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பொதுப் பார்வைக்கு வராமல்
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இஸ்லாமியப் புரட்சியை முன்னெடுத்த அயதுல்லா ரூஹோல்லா கொமேனியின் மறைவைத் தொடர்ந்து, 1989 முதல் கமேனி ஈரானை வழிநடத்தி வந்தார்.
ஈரானில் பஹ்லவி மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த புரட்சியின் சித்தாந்த சக்தியாக கொமேனி விளங்கிய அதே வேளையில், இராணுவ மற்றும் துணை இராணுவ அமைப்புகளை கமேனி வடிவமைத்தார்.

இவருக்குப் பின் வந்த மொஜ்தபா கமேனி, அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து பொதுப் பார்வைக்கு வராமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஏப்ரல் 8 இல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மொஜ்தபா கமேனி மேலும் தீவிரமான பங்களிப்பை மேற்கொள்வது போல் தெரிகிறது என்று இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் மார்கோ ரூபியோ கூறியிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |