உக்ரைன் இளம்பெண் அகதிகளை சீரழிக்கக் காத்திருக்கும் கடத்தல்காரர்கள்: சுவிஸ் அரசு எடுத்துள்ள நடவடிக்கை
பாவம் இந்த இந்த உக்ரைன் பெண்கள்...
உக்ரைனில் இருந்தால், ரஷ்யப் படைவீரர்களிடமிருந்து உயிரையும் மானத்தையும் காப்பாற்றப் போராடவேண்டியிருக்கிறது.
உக்ரைனிலிருந்து தப்பி வெளியேறினால், அடைக்கலம் தருவதாகக் கூறி தங்களை சீரழிக்கக் காத்திருப்பவர்களுக்கும், இந்தப் பரிதாபச் சூழலையும் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்க முயலும் கடத்தல்காரர்களுக்கும் பயப்படவேண்டியிருக்கிறது...
உயிரையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம்?
ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வரும் மற்றும் வந்துள்ள இளம் பெண் அகதிகளை பயன்படுத்திக்கொள்ளக் காத்திருக்கும் ஆண்களைக் குறித்த செய்திகள் வெளியாகி பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், அதேபோல் ஒரு சூழ்நிலை சுவிட்சர்லாந்துக்கு வரும் உக்ரைன் இளம் பெண் அகதிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது சுவிஸ் அரசு.
ஆகவே, சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம், தங்கள் நாட்டிலிருந்து தப்பியோடிவரும் மக்களின் பாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களை, குறிப்பாக பெண்களையும் சிறுபிள்ளைகளையும் சீரழிக்கக் காத்திருக்கும் நபர்களைக் குறித்து கவனமாக இருக்குமாறு உக்ரைன் அகதிகளை எச்சரித்துள்ளது.
யாரேனும் உதவுவதாகவோ, அல்லது பணி வழங்குவதாகவோ அதிக அளவில் ஆசை காட்டினால் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ள அரசு, அரசு அதிகாரிகளிடம் மட்டுமே பயண ஆவணங்களைக் கையளிக்குமாறும் உக்ரைன் அகதிகளை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் அகதிகள், தங்கள் அடையாள ஆவணங்களைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் நகல்களையும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது குறித்த விடயங்களையும் தங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
யாருக்காவது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, பாதுகாப்பின்மை குறித்த அச்சம் ஏற்பட்டாலோ, புகலிட மையங்கள் முதலான இடங்களிலுள்ள அலுவலர்களை அணுகுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், மக்கள் கடத்தல் அல்லது, துஷ்பிரயோகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்னும் சுவிஸ் அரசின் ஆலோசனை, இணையத்தில் பல மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.