லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கு இடியாக மாறிய சம்பவம்... உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்
ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தென் புறநகர் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தொடர் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என குறிப்பிடுகின்றனர்.
நஸ்ரல்லாவின் நிலை தொடர்பில் சந்தேகம் நீடித்ததை அடுத்து தற்போது, சனிக்கிழமை பகல் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா படைகளின் தலைவராக செயல்பட்டு வந்தவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ்.
இஸ்ரேல் தரப்பில் இருந்து கசிந்த தகவலில், தொடக்கத்தில் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலைக்கு இஸ்ரேல் போர் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், பின்னர் நஸ்ரல்லா ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டளை மையத்தில் ரகசிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்தே, கொல்லும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நம்ப முடியவில்லை
மேலும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தும் குண்டுகளை இஸ்ரேலின் F15I ரக போர் விமானங்களில் பயன்படுத்தி, படுகொலையை நடத்தியுள்ளனர். நஸ்ரல்லா மட்டுமின்றி, சில முக்கிய தலைவர்கள் உட்பட அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆனால் ஹிஸ்புல்லா தரப்பு இதுவரை இந்த விவகாரத்தில் உறுதிப்படுத்தவில்லை. நஸ்ரல்லா கொல்லப்பட்ட தகவல் லெபனான் மக்களால் நம்ப முடியவில்லை என்றும், அதிர்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல்லா ஆதரவாளர் ஒருவர் தெரிவிக்கையில், ஹிஸ்புல்லா அமைப்பானது ஒரு தலைவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என்றும், அடுத்த தலைவர் உடன் நியமிக்கப்படுவார் என்றும், அவர் இன்னும் உக்கிரமாக செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஹாஷிம் சஃபிதீன் என்பவரே இரண்டாம் கட்ட தலைவராக உள்ளார். நஸ்ரல்லாவுக்கு பதிலாக அவர் இனி தலைவர் பொறுப்புக்கு வரலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nasrallah Hezbollah