வெளிநாட்டில் கொன்று புதைக்கப்பட்ட 5 இந்தியர்கள்... குற்றவாளிகளுக்கு கிடைத்த அதிகபட்ச தண்டனை
சவுதி அரேபியாவில் 5 இந்திய தொழிலாளர்களை கொன்று புதைத்த வழக்கில், அந்த நாட்டவர்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
5 இந்திய தொழிலாளர்கள்
கடந்த 2010ல் பண்ணை ஒன்றில் அந்த 5 இந்திய தொழிலாளர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 2014ல் சவுதி அரேபிய நாட்டவரான அலி ஹாபி என்பவர் தொடர்புடைய பண்ணையை வாடகைக்கு கைப்பற்றியுள்ளார்.
Credit: lifeinsaudiarabia
அத்துடன் நீர்ப்பாசனம் திட்டத்தை கட்டமைக்கும் பொருட்டு அந்த பண்ணையில் பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது அவர் எலும்புகளை கண்டெடுத்துள்ளார். முதலில் ஏதேனும் காட்டு விலங்கு என கருதிய அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த பகுதியில் குவியலாக எலும்புகள் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் விசாரணையை முன்னெடுத்ததில், புதைக்கப்பட்டிருந்தது 5 நபர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் ஐவரின் கைகள் கட்டப்பட்டு வாய் மூடப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
மூவரை அடையாளம் கண்ட பொலிசார்
அந்த ஐவரும் இஸ்லாமியர்கள் எனவும் பொலிசார் அடையாளம் கண்டனர். இதனையடுத்து இந்த கொலை விவகாரம் தொடர்பில் மூவரை பொலிசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
Credit: lifeinsaudiarabia
கைதான மூவரில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், கொல்லப்பட்ட ஐவரில் ஒருவர் தமக்கு வேலை அளித்த நபரின் மகள் உட்பட சில பெண்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதற்கான தண்டனையாகவே ஐவரையும் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கைதான அந்த மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.