அடுக்குமாடி குடியிருப்பில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்: பயணிகள் அனைவரும் பலி
இத்தாலியின் மிலன் புறநகர் பகுதியில் 6 பயணிகள் உட்பட 8 பேர்கள் பயணித்த குட்டி விமானம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அனைவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குட்டி விமானம் விபத்துக்குள்ளான தகவல் வெளியானதும், சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரே, விமானிகள் உட்பட அனைவரும் பலியானதாக தகவல் வெளியிட்டனர்.
முதலில் 5 பயணிகள் என தகவல் வெளியான நிலையில், பின்னர் இரு விமானிகள் உட்பட 8 பேர்கள் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. மேலும், பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நாட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மிலன் புறநகர் பகுதிக்கு அருகாமையில் உள்ள San Donato Milanese சுரங்க ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அந்த விமானம் மோதி வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் அப்பகுதில் நிறுத்தப்பட்டிருந்த பல எண்ணிக்கையிலான கார்கள் தீக்கிரையாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனங்களில் யாரும் அப்போது இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
விமான மோதி விபத்துக்குள்ளானதற்கு பிறகு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு பின்னரே, பயணிகள் தொடர்பிலும், விபத்துக்கான காரணம் தொடர்பில் தெரியவரும் என கூறப்படுகிறது.