ட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்... ஒரே ஒரு நிபந்தனை: கிம் ஜோங் உன் அழைப்பு
அணு ஆயுதங்களைக் கைவிட கோராதவரையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரிக்க காரணங்கள் இல்லை என வடகொரியாவின் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
இனிமையான நினைவுகள்
இருப்பினும், தடைகளில் இருந்து விடுவிக்கப்பட அணு ஆயுதங்களை ஒருபோதும் கைவிட முடியாது என்றும் கிம் குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை உயர் மக்கள் சபையில் ஆற்றிய உரையில், தனிப்பட்ட முறையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இனிமையான நினைவுகள் தமக்கு இன்னும் உள்ளதாக கிம் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்பின் முதல் ஜனாதிபதி பதவியின் போது இரு தலைவர்களும் மூன்று முறை சந்தித்துள்ளனர். தென் கொரொயாவில் உள்ள புதிய லிபரல் அரசாங்கம் கிம் உடனான பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுப்பதில் ட்ரம்பை முன்னிலை வகிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.
அபத்தமான வெறி
இந்த நிலையில், அமெரிக்கா நம்மை அணு ஆயுதமற்ற நாடாக்க வேண்டும் என்ற அபத்தமான வெறியைக் கைவிட்டு, யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால், உண்மையான அமைதியான சகவாழ்வை விரும்பினால்,
அமெரிக்காவுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என கிம் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த அணு ஆயுதங்களை உருவாக்குவது என்பது ஒரு நாட்டின் உயிர்வாழ்வின் விடயமாக உள்ளது என்றே கிம் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |