புதிய அணு ஆயுத நீர்மூழ்கியை மகளுடன் பார்வையிடச் சென்ற கிம் ஜோங் உன்
வட கொரியாவின் ஆயுதத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க விரிவுபடுத்துதல் தேவை என அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி மூலம் இயங்கும்
தனது மகளுடன் நாட்டின் அதிநவீன அணுசக்தி மூலம் இயங்கும் ஏவுகணை தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிடச் சென்றபோது இதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேம்பட்ட ஆயுதங்களுக்கான இராணுவத்தின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கவும் புதிய வெடிமருந்துத் தொழிற்சாலைகளைக் கட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரகசியம் காக்கப்படும் ஒரு கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வரும் 8,700 டன் எடை கொண்ட அணுசக்தி மூலம் இயங்கும் ஒரு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலே வட கொரியாவின் புதிய ஆயுதம்.
கிம் முக்கிய ஆயுத உற்பத்தித் தளங்களுக்கு மூத்த அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டதுடன், வரவிருக்கும் ஆண்டில் குறிப்பாகத் தீவிரமான பணிகளுக்குத் தயாராகும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஆழமடைந்து வரும் இராணுவ உறவுகள் தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இராணுவத் தொழில்நுட்பம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு துருப்புக்கள், பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ராக்கெட் அமைப்புகளை வழங்கி வருகிறது.
அதற்குப் பதிலாக, ரஷ்யா நிதி உதவி, உணவு மற்றும் எரிசக்திப் பொருட்கள், மற்றும் முக்கியமான இராணுவத் தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

மட்டுமின்றி, வடகொரியாவுக்கு மேம்பட்ட விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் ரஷ்யா உதவுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது,
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மேம்பாட்டுடன் தொடர்புடையது என்றே கூறுகின்றனர். மேலும், வட கொரியாவிடம் சுமார் 50 அணு ஆயுதங்கள் கைவசம் இருக்கலாம் என்றே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |