ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: பிரித்தானியாவில் இன்று நடைபெறும் நிகழ்வுகளின் பட்டியல்!
பிரித்தானிய மகாராணியின் பூத உடல் ரயில் மூலமாக லண்டனுக்கு கொண்டுவரப்படுகிறது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுவார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று மாலை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தகவல் வெளிவந்துள்ளது.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 1952ம் ஆண்டு தனது 25 வது வயதில் அரியணை ஏறினார், சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
Sky News
இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தின் பால்மோரலில் இருந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வெள்ளிக்கிழமை ரயில் மூலமாக லண்டனுக்கு கொண்டுவரப்படுகிறது.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து பிரித்தானிய மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அத்துடன் ராணியின் இறுதி சடங்கு நடைபெறும் வரை நாடு முழுவதும் 12 நாட்கள் வரை துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP
பிரித்தானிய மகாராணி மறைவை தொடர்ந்து நாட்டில் இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகள்:
- ராணியின் மறைவை தொடர்ந்து நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது ராணி கமீலா இருவரும் விரைவில் பால்மோரலில் இருந்து லண்டனுக்கு திரும்புவார்கள்.
- மன்னர் நாடு திரும்பியதும் தனது முதல் பார்வையாளராக பிரித்தானியாவின் பிரதமர் லிஸ் ட்ரஸை சந்திக்கவுள்ளார்.
Sky News
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திட்டமிட்டப்படி காலை 9.30 மணிக்கு தொடங்காமல், அதற்கு மாற்றாக நண்பகலில் தொடங்கும். பிரதமர் லிஸ் ட்ரஸ் தலைமையில் கூடும் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்த அழைக்கப்படுவார்கள்.
- இந்த அமர்வு இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது.
- மேலும் மத்திய லண்டனில் உள்ள செயிண்ட் பால்ஸ் கதீட்ரலில் நடைபெறவுள்ள நினைவேந்தல் பொது சேவையில் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
- ராணியின் இறுதிச் சடங்குக்கு மறுநாள் வரை 12 நாட்கள் துக்க நாளாக அனுசரிக்கப்படும். அத்துடன் தேசிய துக்க நாளின் இறுதி தினம், பொது விடுமுறை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மிக முக்கிய நிகழ்வாக பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
- இந்த உரையில் தனது தாயார் மற்றும் நாட்டின் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவார் மற்றும் நாட்டின் புதிய தலைவராக பணியாற்ற உறுதிமொழி அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ்: நாணயங்கள் முதல் தேசிய கீதம் வரை...பிரித்தானியாவில் நிகழவிருக்கும் மாற்றங்கள்!
- மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நல்லடக்கத்தின் போது அவரது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் விதமாக மொத்தம் 96 குண்டுகள் வானில் சுடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.