சும்மா வரவில்லை சுதந்திரம்... நாட்டு மக்களுக்கு மன்னர் சார்லசின் செய்தி
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைந்த நாளை நினைவுகூரும் வகையில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், இன்றைய சூழலில் உலகுக்கே மிகவும் அவசியமான சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
VJ Day
பிரித்தானியா, அமெரிக்கா முதலான நாடுகள், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் சரணடைந்த நாளை VJ Day என்னும் பெயரில் நினைவுகூர்கின்றன.
அமெரிக்கா, பிரித்தானியா முதலான நாடுகளின் கூட்டணியான நேச நாடுகள் படையிடம் ஜப்பான் சரணடைந்ததே இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர காரணமாக அமைந்ததை மறுப்பதற்கில்லை.
VJ Day அல்லது Victory over Japan Day என்பது, பிரித்தானியாவில் ஆண்டுதோறும் ஆகத்து மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
மன்னர் சார்லசின் செய்தி
இந்நிலையில், VJ தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மன்னர் சார்லஸ் தனது உரையில் மிக முக்கியமான சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உலக நாடுகள் பலவற்றிற்கிடையிலான மோதல்கள், என்று மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆக, தனது VJ தின உரையில் உலகுக்கே செய்தி கூறும் வகையில் சில விடயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார் மன்னர் சார்லஸ்.
உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மோதல்கள், போரின் மோசமான விளைவுகள் போர்க்களத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பதற்கு VJ தின நினைவு நாள் ஒரு நினைவூட்டல் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.
VJ தின ஹீரோக்கள், சுதந்திரத்தை நமக்குப் பெற்றுத்தந்ததுடன் விட்டுவிடவில்லை, பெற்ற சுதந்திரத்தை நாம் எப்படி பாதுகாத்தாகவேண்டும் என்பதற்கான முன்மாதிரியையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.
முன்னெப்போதும் ஒன்றிணைந்து போரிடாத பல நாடுகள், இரண்டாம் உலகப்போரின்போது, தங்கள் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடுகளையும் தாண்டி ஒன்றிணைந்து போரிட்டார்கள்.
போரின்போதும் அமைதியின்போதும், மிகப்பெரிய ஆயுதம் என்பது நாம் கைகளில் சுமக்கும் ஆயுதம் அல்ல, அது நாம் கோர்க்கும் கைகள் என்பதை அவர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளார்கள். அது நமக்கெல்லாம் முக்கியமான ஒரு பாடமாகும்.
போரின்போது, போர்க்களத்தில் போரிட்டவர்கள் மட்டுமல்ல, போர்க்கைதிகளாக பிடிபட்டவர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த அப்பாவி மக்கள் என பல தரப்பினரும் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தார்கள்.
இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் உலகப்போரில் அவர்கள் சந்தித்த அனுபவங்கள், போர் என்பது போர்க்களத்தில் மட்டும் பாதிப்பை, இழப்பை ஏற்படுத்துவதில்லை, அது மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும் கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.
தனது உரையை முடிக்கும்போது, இந்தியாவிலுள்ள நாகலாந்தின் தலைநகரான கோஹிமாவில் அமைந்துள்ள, காமன்வெல்த் போர் கல்லறைகள் அமைந்துள்ள நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார் மன்னர் சார்லஸ்.
‘நீங்கள் இங்கிருந்து வீட்டுக்குச் செல்லும்போது, எங்களைக் குறித்து உங்கள் வீடுகளிலிருபவர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் நாளைய தினத்துக்காக, நாங்கள் எங்கள் இன்றைய தினத்தைக் கொடுத்தோம்’ என அந்த நினைவிடத்தில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |