ட்ரம்பின் மனமாற்றம்... மன்னர் சார்லஸ் காரணம்: உக்ரைன் வெளியிட்ட பின்னணி
உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் சமீபத்திய மனமாற்றத்திற்கு காரணம் மன்னர் சார்லஸ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் அதிரடி
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதியின் அரசு முறை பயணத்தின் போது மன்னர் சார்லஸுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் உக்ரைன் போர் தொடர்பான கொள்கை மாற்றத்தில் மிகவும் முக்கியமானவை என்றே ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முதன்மை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யர்கள் தங்கள் படையெடுப்பில் வென்ற அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் திரும்பப் பெற முடியும் என்று ட்ரம்ப் அதிரடியாக கூறியிருந்தார். அப்படியான ஒரு முடிவுக்கு ட்ரம்ப் வருவது உண்மையில் உக்ரைன் நிர்வாகத்தை வியப்பில் ஆழ்த்தியது.
ரஷ்யர்கள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் கைவிட வேண்டும் என விளாடிமிர் புடினுடனான சந்திப்பிற்கு பின்னர் கூறி வந்த ட்ரம்ப், தற்போது உக்ரைனுக்கு சாதகமாக பேசி வருகிறார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் உக்ரைன் தமது நிலையை மீட்டெடுக்க முடியும் என்பதுடன் போரையும் வெல்லலாம் என ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ்
இந்த நிலையில் ட்ரம்பின் முடிவை மாற்றும் வகையில் உக்ரைன் தரப்பு என்ன செய்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள Andriy Yermak, மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரின் ட்ரம்புடனான சந்திப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு பயணப்பட்டதன் பின்னரே, கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Andriy Yermak தெரிவித்துள்ளார். வின்ட்சர் மாளிகையில் ட்ரம்ப் தம்பதியை வரவேற்ற மன்னர் சார்லஸ், அரசு முறை விருந்திண் போது தனது உரையில் உக்ரைனைப் பற்றி பேசினார்.
இரண்டு உலகப் போர்களில், கொடுங்கோன்மை சக்திகளைத் தோற்கடிக்க நாம் ஒன்றாகப் போராடினோம். இன்று, மீண்டும் ஒருமுறை ஐரோப்பாவை கொடுங்கோன்மை அச்சுறுத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பைத் தடுத்து அமைதியைப் பாதுகாக்க உக்ரைனுக்கு ஆதரவாக நாமும் நமது நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |