அமெரிக்கா செல்லும் மன்னர் சார்லஸ்: முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், இந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாத இறுதியில், அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
ஈரான் போர் துவங்கியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிறிது மோதல் போக்கு உருவாகியுள்ளது.

பல நேட்டோ நாடுகளைப்போல பிரித்தானியாவும் ஈரான் போரில் அமெரிக்காவுடன் கைகோர்க்காததால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கோபமடைந்தார்.
இனி உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அமெரிக்கா உங்களுக்கு உதவ முன்வராது, நீங்களேதான் உங்களுக்காக போராடவேண்டியிருக்கும் என ட்ரம்ப் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
பின்னர் பிரித்தானிய ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தும், நிலைமை முற்றிலும் சீராகவில்லை.
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில், அதாவது, உலகம் போர்ச்சூழலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாத நிலையில், மன்னர் சார்லசின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மன்னர் சார்லஸ் எப்போதுமே மற்ற நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் திறன் வாய்ந்தவர் என்பதை சொல்லத் தேவையில்லை.
ஆக, தற்போது அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிறிய விரிசலை செவ்வைப்படுத்த மன்னருடைய அமெரிக்கப் பயணம் தேவைப்படுகிறது.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இரு நாடுகளுக்குமிடையிலான அரசியலிலும் இந்த ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும்.
ஆம், அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் ஆகும் நேரத்தில், சரியாக அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார் மன்னர் சார்லஸ்.
2007ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியார் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவருக்கு அடுத்து பிரித்தானிய தலைமை மேற்கொள்ளும் முதல் அமெரிக்க அரசு முறைப்பயணம் இதுதான்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியர்கள் பலர் ட்ரம்ப் மீது கோபத்திலிருக்கிறார்கள். அமெரிக்காவோ ஈரான் போரில் நடுவில் இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் மன்னர் சார்லஸ் அமெரிக்கா செல்கிறார். பொதுவாகவே ராஜ குடும்பத்தினர் அரசியலில் தலையிடமாட்டார்கள். ஆக, போர் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தாகவேண்டும் என்பதால் மன்னருக்கு தர்மசங்கடமான நிலை என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |