பட்டப்பகலில் நடந்த கொடூரம்... ரஷ்ய உளவாளிகளால் பழி தீர்க்கப்பட்ட நபர்: வெளிவரும் பின்னணி
ஜேர்மனியில் பட்டப்பகலில் முன்னாள் செச்சென் போராளி ஒருவரை ரஷ்ய உளவாளிகள் கொன்றுள்ள சம்பவம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக செச்சென் போராளிகளுடன் இணைந்து போரிட்டதாக கூறியே Tornike Khangoshvili என்பவரை ரஷ்ய உளவாளிகள் ஜேர்மனியின் பெர்லின் நகரில் வைத்து கொன்றுள்ளனர்.
2019ல் பெர்லின் நகரில் ஒரு பூங்காவில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள பெர்லின் நீதிமன்றம் ரஷ்யாவின் பங்கை உறுதி செய்துள்ளது.
இது ஒரு நாடு முன்னெடுத்த பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ள நீதிபதி, ரஷ்ய உளவாளி Vadim Krasikov என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை முன்னெடுத்த ஜேர்மனி, ரஷ்ய தூதுவரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளதுடன், ஜேர்மனிக்கான இரு ரஷ்ய தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டது.
மேலும், Vadim Krasikov என்பவருக்கு ரஷ்ய நிர்வாகம் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளதாகவும், அதனாலையே, குறித்த நபர் ஜேர்மனிக்கு பயணித்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
Vadim Krasikov மீதான நீதிமன்ற தீர்ப்பானது அரசியல் நோக்கம் கொண்டது என பெர்லினில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், இது திட்டமிட்ட படுகொலை எனவும், ஒரு நாடு முன்னெடுத்த பயங்கரவாதம் எனவும் ஜேர்மனியின் சட்டத்திற்கு புறம்பானது எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Vadim Krasikov தொடர்பில் 2019ல் கடுமையான வார்த்தைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியதுடன், அவர் ஒரு மோசமான தீவிரவாதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2004ல் மாஸ்க்கோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் புடின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.