புதிய சமாதான ஒப்பந்தத்தை நிராகரித்த புடின்: உக்ரைனில் மரண எண்ணிக்கையைக் கூட்டிய ரஷ்யா
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைன் முன்மொழிந்துள்ள 19 அம்ச புதிய சமாதான ஒப்பந்தத்தை எதிர்பார்த்தது போலவே ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
முக்கிய மாற்றங்கள்
சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் முடிவடைந்த நிலையில், உக்ரைன் மீது தொடர் வான்வழித்தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதுடன், மரண எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் கடந்த வாரம் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 28 அம்ச அமைதி ஒப்பந்தத்தில் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முக்கிய மாற்றங்களை முன்மொழிந்தன.
இதில் ரஷ்யா G8ல் மீண்டும் இணைவதை நிராகரித்ததுடன் உக்ரைனின் இராணுவத்தின் உச்சவரம்பை 600,000 இலிருந்து 800,000 ஆக உயர்த்தியது ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் திங்கள்கிழமை இரவு எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று கூறினார்.
திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தமானது அமெரிக்கா மற்றும் உக்ரைன் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ரஷ்யாவிற்கும் சாதகமான ஒப்பந்தம் இதுவென குறிப்பிட்டிருந்தனர்.

நல்ல செய்தி வந்துள்ளது
ஆனால், புதிய ஒப்பந்தம் ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம் என்றே பல தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே, ஜெனீவாவில் நடந்த விவாதங்களில் இருந்து நல்ல செய்தி வந்துள்ளது என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகங்களில் நம்பிக்கையுடன் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், உக்ரைனுக்கு கெடு விதித்தது போன்று, புதிய சமாதான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ரஷ்யாவிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தம் அளிப்பாரா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டாக தயாரித்த ஒப்பந்தத்தை உக்ரைன் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், மறுத்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கடந்த வாரம் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |