பெற்ற குழந்தைகளை காதலுக்காக கொன்ற குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? தமிழகத்தை உலுக்கிய வழக்கில் வெளியானது புது தகவல்
தமிழகத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அபிராமிக்கு விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
2018-ல் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என கூறினால் அது மிகையாகாது! குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமி (25). தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.
அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து இருவீட்டாரும் அறிந்த நிலையில் அவர்களை கண்டித்தனர். ஆனால் திருமணத்தை மீறிய உறவு அபிராமியின் கண்ணை மறைத்ததால் அவர் அதை கேட்காமல் கணவர் இரவு வேலைக்கு சென்ற பின்னர் சுந்தரத்துடன் பழக்கத்தை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் தனது மகிழ்ச்சிக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக நினைத்து அவர்களை கொல்ல முடிவெடுத்தார். அதன்படி பாலில் 5 தூக்க மாத்திரைகளை போட்டு குடும்பத்துக்கு தந்துள்ளார். விடிகாலையில் இறந்திருப்பார்கள் என்று நினைத்துள்ளார். ஆனால் மகன், கணவன் இருவருமே சாகவில்லை.. பெண் குழந்தை மட்டும் படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள்.
மறுநாள் விஜய் வேலைக்கு சென்றதும், 4 வயது மகனின் மூக்கையும், வாயையும் பொத்தி துடிதுடிக்க கொன்றார். பின்னர் காதலன் சுந்தரத்துடன் கன்னியாகுமரிக்கு தப்ப முயன்ற போது பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றும் வருகிறது.. தற்போது புழல் சிறையில் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் உள்ளனர்.. இவர்களை பொலிசார் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சியங்கள் இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் மட்டுமே நடைபெற உள்ளது. மற்றபடி அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளதோடு அபிராமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வெகுவிரைவில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவ்வழக்கில் அபிராமிக்கு உச்சக்கட்ட தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் 2018ல் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.